நமது பொது அறிவு (common sense) மட்டுமே போதுமானது.
Total Readers: 24 +
நமது மகிழ்ச்சி ஏன் காணாமல் போகிறது ? இதை சொல்ல ஒரு பிரம்மானந்த சுவாமி, சிவானந்த சுவாமி, ஜக்கி வாசுதேவ், அரவிந்தர், ரவி சங்கர், என யாருமே தேவை இல்லை ! நமது பொது அறிவு (common sense) மட்டுமே போதுமானது.
நமது மகிழ்ச்சியின் அடித்தளம் என்ன ? [1] நல்ல எண்ணம், [2] குறைவான ஆசை எதிர்பார்ப்புகள், [3] தேவையான செயல், [4] அளவான பேச்சு, [5] அவசியமான பொருள்கள் மற்றும் வசதிகள்.. இந்த ஐந்துதான் நமது மகிழ்ச்சியை நிர்ணயக்கின்றன. துரதிருஷ்ட வசமாக, அவைகளுடன் மற்ற மனிதர்களும் சம்பந்தப்படும்போதுதான் நமது மகிழ்ச்சி முழுவதும் காணாமல் போய் விடுகிறது. காணாமல் போவதை எப்படித் தேடுவது ? இந்த அடித்தளத்தை நாம் கட்டுப்படுத்தி வலுவாக்கினாலே போதும். பெரும்பாலும் இந்த அடித்தளத்தை ஆட்டிப் பார்ப்பது ஐந்தாவது காரணியான (factor / reason), அவசியம் இல்லாத பொருள்கள் மற்றும் வசதிகள்தான் . அந்த இரண்டையும் அளவாக, மேலே சொன்ன மீதி நான்கு விஷயங்களில் பயன் படுத்துவதே மகிழ்ச்சிக்கு குறுக்கு வழி... எப்படி ?
எண்ணம் / ஆசை : அதிகமாக சமூக வலைத்தளங்களில் மற்றவரது பகிர்வுகளைப் பார்க்காதீர்கள். பொதுவாக எல்லோருக்குமே தங்கள் வசதிகளை , பொருட்களை வெளிக்காட்டிக் கொள்ளும் குணம் உள்ளது. அவ்வாறு வெளிக்காட்டுவதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். சில பேர் இந்த வசதிகள் தங்களிடம் இல்லாமலேயே அவை மற்றவர்களிடம் இல்லாததை கிண்டல் செய்து பகிர்வார்கள். இவற்றால், வசதி இல்லாவர்களிடம் தன்னம்பிக்கை குறைந்து வசதியைப் பெருக்கிக்கொள்ள ஆசை வருகிறது. தமக்கு வேண்டியவர்கள் அந்த வசதி இருந்து தம்மிடம் இல்லாவிட்டால் கேலி செய்வார்கள் என நினைத்து அஞ்சுகிறோம். நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு (comparison) பார்ப்பதுதான் நமது துன்பத்தின் ஆரம்பம்.
செயல் : எது மிக அவசியமோ அதை மட்டுமே செய்யுங்கள். அது படிப்பானாலும் சரி, வேலை ஆனாலும் சரி, பொழுபோக்கு ஆனாலும், எந்த வகையானுலும் சரி. ஒவ்வொரு வகையிலும் பலவழிகளை உருவாக்குதல் தவறு. உதாரணமாக, சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதே பொழுதுபோக்குதான். ஆனால் அதைத்தவிர, யூ-ட்யூபில் வீடியோ பார்ப்பது, டிவியில் சினிமா பார்ப்பது என்று நேரம் செலவிடுவது நமது மகிழ்ச்சியை காணாமல் அடித்து விடும், உருப்படியாக செய்ய வேண்டிய வேலைக்கு ஒதுக்க வேண்டிய நேரம் காணாமல் போனதால்.
பேச்சு : பேசும்போது வேகமாக பேசுவது, வார்த்தைகள் கட்டுப்பாடு இல்லாமல் பேசுவது, அளவாக இல்லாமல் நிறைய பேசுவது, நினைத்ததை அப்படியே ரன்னிங் காமெண்டரி போல சொல்வது ஆகியவை மற்றவர்களது மனதைப் புண்படுத்தலாம், அல்லது அவர்களது நேரத்தை பாழாக்கலாம். அல்லது யாருக்கு என்ன தெரியக்கூடாதோ அது தெரிந்து விடலாம். மற்றவர்களின் ரகசியங்கள் லீக் ஆகலாம். இவை எல்லாம் வெட்டி அரட்டையினால் (பேச்சு, வலைத்தளத்தில் சாட்டிங்) வரும் விளைவு. நண்பர்கள், உறவினர்கள், அண்டைவீட்டில் இருப்போர் ஆகியோரிடம் அளவாக பேசுங்கள்.
பொருள்கள் / வசதிகள் : நமது மகிழ்ச்சி காணாமல் போவதற்கு 80% இவை இரண்டுமே காரணம். வெளியில் சென்றால் நாம் காணும் காட்சிகள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரால்தான் இந்த மகிழ்ச்சி காணாமல் போகிறது. பொருள்களும் வசதிகளும் நமது அடிப்படை தேவைக்கு மட்டுமே. சாப்பாடு, உடை, இருக்க இடம் இவைதான் அடிப்படை தேவை. இவற்றைப் பெற அடிப்படை ஒரு தொழில் தான். இந்த தொழில் வளர என்ன அவசியம் தேவையோ அவற்றைப் பெற உழைப்பு செலவிட வேண்டும். சாப்பாடு ஆடைகள் மற்ற வசதிகள் எதுவானாலும் அவை அடிப்படை தேவைக்குத்தான். நாம் ஆசைப்படும் எல்லாவற்றையும் வாங்கி பயன்படுத்த நமக்கு எங்கே நேரம் இருக்கிறது. மிக அதிக இடைவெளியில் தேவைப்படும் ஒரு பொருளை, வசதியை ஏன் வாங்க வேண்டும் ? சிலர் " நான் கடினமாக உழைக்கிறேன் நல்ல வருமானம் வருகிறது ஆகவே எனக்கு நிறைய வசதிகள் வேண்டும்" என நியாயப்படுத்துவார்கள் ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சி இருக்காது. எதையோ தொலைந்து விட்டவர்கள் போல இருப்பார்கள். எது இல்லையோ அதைப்பற்றியே சிந்தனை செய்து கையில் இருப்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் தொலைத்து விடுவார்கள்.
ஆக, இந்த ஆறு விஷயங்களை கட்டுப்படுத்தினால் நாம் ஏற்கனவே மகிழ்ச்சியாக இருப்பது நமக்கு புரியும் . தினமும் யோசியுங்கள். இந்த ஆறு குணங்களையும் நாம் பயிற்சி செய்கிறோமோ என்று. நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அவ்வாறு இருக்க நாம் தினமும் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சியை நிறுத்தினால் இந்த ஆறு குணங்களும் காணாமல் போய் அதை தொடர்ந்து மகிழ்ச்சியும் தொலைந்து விடும். இந்த கட்டுரைக்கு அடித்தளம் இங்கு உள்ள புத்தகங்களின் தலைப்புகளே .
-- சரவணன் e-mail: nilassoru@gmail.com

